search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி அருணாஜெகதீசன் விசாரணை"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணாஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தேசிய, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.



    அவர் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 24 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    4-வது கட்டமாக விசாரணை நேற்று முன்தினம் (17-ந்தேதி) தொடங்கியது. இதற்காக விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். 4-வது கட்ட விசாரணைக்காக மொத்தம் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் நேற்று முன்தினம் ஆஜராவதற்காக சம்மன் வழங்கப்பட்ட 8 பேரில் 7 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நேற்று ஆஜராவதற்காக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 7 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    நீதிபதி அருணாஜெகதீசன் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினார். இதனால் விசாரணை நடக்கும் முகாம் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். நீதிபதி அருணா ஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan

    ×